மகா பிரதோஷம் என்றால் என்ன ? எந்தெந்த கோவில்களில் அந்நேரத்தில் வழிபட வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

 மகா பிரதோஷம் என்றால் என்ன ? எந்தெந்த கோவில்களில் அந்நேரத்தில் வழிபட வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்

 எம்பெருமான் "சிவனையும்", அந்த ஆலகால விஷம் அருந்திய "நீல கண்டனை" நர்த்தனம் ஆட செய்த "நந்தியம்பெருமானையும்" வணங்கும் உன்னதமான நாள் தான், "பிரதோஷம்". திரயோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான நேரம் "பிரதோஷ காலம்" எனப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும்; வளர்பிறையில் ஒரு திரயோதசி திதியும், தேய்பிறையில் ஒரு திரயோதசி திதியும் வரும். அதாவது, மாதம் இரண்டு பிரதோஷங்கள் வரும். இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் 24 பிரதோஷங்கள் வரும். இவ்வாறு பிரதோஷம் வருகின்ற நாள் சனிக்கிழமை என்றால், அந்த பிரதோஷத்தை "மகா பிரதோஷம்" என அழைப்பர்.

இந்த "பிரதோஷ காலம்" தான், காலனை வென்ற "காளகஸ்தி நாதனை" வணங்க உகந்த காலம். மேலும் இந்த பிரதோஷ காலம் தான் ராகு, கேது எனும் இரு கிரகங்கள் தோன்ற காரணமான காலம். அதனால், இந்த பிரதோஷ காலத்தில்; எம்பெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபட்டால் நிச்சயம் கால சர்ப்ப தோஷம், அதாவது; ராகு, கேது தோஷம் மற்றும் ராகு, கேதுவின் தீவிர பாதிப்புகள் நம்மை விட்டு விலகும்.வருடம் முழுவதும் சிவாலயம் சென்று வழிபட முடியாதவர்கள்; வருடத்திற்கு ஒரு முறை, ஒரே ஒரு பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால், 'ஒரு வருடம் ஆலகாலம் உண்டவனை தரிசித்த பலன் கிடைக்கும்'. 

        பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

            பிரதோஷ தரிசனம் காணும்  வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

              பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். 

பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.                

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று  செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

               சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில்  மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

               நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

              சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பண்ருட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம். 

             பிரதோஷ நேரத்தில் "நமசிவாய" மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. 

              மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெப,தபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.



Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.