ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.


ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.

                    நந்தியம்பெருமான் சாபத்தில் இருந்து வேத வியாசர் பாவ விமோச்சனம் பெற்ற திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில்.

                    காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் தெற்குப் பகுதியில் பச்சையப்பன் மகளிர் கல்லூரியை கடந்து சென்றால் வேகவதி ஆற்றங்கரையில் வசிட்டேசுவரர் கோயிலின் முற்பகுதியில் அமைந்துள்ளது மிக பழமையான ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில்.





                    பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தஸ்ரீ சிவஞான ஸ்வாமிகள் எழுதிய காஞ்சி புராணம் என்னும் நூலில் வேத வியாசரைப் பற்றியும் அவரது காஞ்சிபுரத்து ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் பற்றியும் விரிவாக கூறி உள்ளார்.

திருக்கோவிலின் தல வரலாறு :

                    வியாசர் கலியுகம் வருகையை உணர்ந்து அச்சங்கொண்டு, காசி சென்று விசுவநாதரை வழிபட்டிருந்தார். அவ்வேளையில் அங்குள்ள முனிவர்களின் வேண்டுகோளின்படி, வேதம் முதலியவற்றின் பொருளை அவர்களுக்கு உபதேசித்தார். உபதேசத்தை கேட்டுக்கொண்டிருந்த முனிவர்கள், வேதத்தின் முடிந்த பொருளை ஒரு வார்த்தையில் எடுத்துரைக்குமாறு வேண்டினர். இப்போது வியாசர் தான் முன்பு கூறியதற்கு மாறாக "நாராயணனே பரபிரம்மம்" என்றார். மாறான விளக்கத்தைக் கேட்ட முனிவர்கள் திகைப்புற்றனர். மேலும் அவர்கள், அவர் கூறியதை விசுவநாதர் கோயிலில் வந்து சொல்லுமாறு கூற, வியாசரும் அதன்படியே விசுவநாதர் கோயிலில் வந்து நின்று இருகைகளையும் உயர்த்தியவாறே "நாராயணனே பரப்பிரம்மம்" என்றார். இதைக்கேட்டு கோபங்கொண்ட நந்தியம்பெருமான், "அப்படியே இருக்கக்கடவதாக" என்று வியாசரை சபித்தார்.




                    சாபத்தால், வியாசருடைய உயர்த்திய இரு கைகளும் அப்படியே மேலேயே நின்று போயின. வியாசர் திருமாலை வேண்ட; திருமாலும் அவர்முன் தோன்றி, அவரின் தவறான உபதேசத்திற்கு வருந்தி வியாசரைப்பார்த்து, "சிவபெருமானை சரணடைய" ச் சொன்னார். மனம் நொந்த வியாசர், காஞ்சி வந்து, ஏகம்பநாதரைப் பணிந்து போற்றி சார்ந்தாசயப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பேறு பெற்றார் என்பது இத்தல வரலாறாகும்.

                    வியாசர் பிரதிஷ்டை செய்து வழிபட்டசிவாலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு வியாச சாந்தாலீஸ்வரர் சுவாமியை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியவர்களாகிய நமக்கு அளித்துள்ளார்.

அமைவிடம் :








ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில்,

விஷ்ணுகாஞ்சி,

காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501.

(காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணுகாஞ்சிபுரத்தின் தெற்குப் பகுதியில் பச்சையப்பன் மகளிர் கல்லூரியை கடந்து சென்றால் வரும் வேகவதி ஆற்றுச் சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் இந்த திருக்கோவில் அமைந்து உள்ளது.)

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.