செருப்பினில் தொடங்கி விளக்குமாறில் முடிக்கும் படியாக காளமேகப் புலவர் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கிய பாடல் : சித்தர்க்கடியான்.

செருப்பினில் தொடங்கி விளக்குமாறில் முடிக்கும் படியாக காளமேகப் புலவர் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கிய பாடல் : சித்தர்க்கடியான். 

ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார், “ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே, உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்று. “முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்று தன்னிடம் பாடச் சொன்ன புலவரிடம் வினவினார், காளமேக புலவர்.

"வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

  "என்ன கொடுமை? என் இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெற்றி வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனை பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா? என மனம் கேட்க, அதை தகும் என்றும்; முறை என்றும் மிக மிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்; கீழ்க்கண்ட பாடலை பாடியதன் விளைவாக,

"செருப்புக்கு வீரர்களைச் சென்றுயக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனைப் புல்ல- மருப்புக்குத் 

தண்டேன் பொழிந்த திருத்தாமரை மேல்வீற்றிருக்கும்

வண்டே விளக்கு மாறே ".

பாடலின் பொருள் :

  'செரு' என்றால் "போர்க்களம்". 'செருப்புக்கு' என்றால் "போர்க்களம் புகும்" என்று பொருள்படும். அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை, வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன். (விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?)

எம்பெருமான் சிவனின் புத்திரன், எங்கள் தமிழர்களின் தனிக் கடவுள், அகத்தியர் முதல் அந்திம சித்தன் வரை சித்தம் அடைய வேண்டுகின்ற எங்கள் முருகப் பெருமான் அருள் அனைவருக்கும் இந்த தைப் பூச நன்னாளில் கிட்டட்டும். 

வெற்றி வேல் ! வீர வேல் !!

"வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !" 

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.