திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பிகை பெரியநாயகி அம்மன்

 திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பிகை பெரியநாயகி அம்மன் வீற்று இருக்கும் சீர்காழி சட்டைநாதர் கோவில்


                    சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

                    திருஞான சம்பந்தர் சைவமும்; தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் "முருகப்பெருமானின்" திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.

குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர் பார்வதியிடம், "குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு" கூறினார். அவ்வண்ணமே; அன்னை உமையவளும், ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்.

 சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர்; சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு, "யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்" எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.

பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் "தோணியப்பர்" என்ற பெயரிலும், அன்னை "பெரியநாயகி" என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே, சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.

                    இதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது.

                    இன்றும் இந்த தளத்திற்கு சென்று மனமுருக வேண்டினால் வாய் பேச முடியாதவர்கள் வாய் பேசும் அதிசயத்தை பற்றி நாளை பார்ப்போம்.

                    நாளையும் தொடரும்...... 



Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.