புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : பகுதி 2 : சித்தர்க்கடியான்.

புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : சித்தர்க்கடியான். 

                                                            பகுதி - 2

                    பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் “பாதாள பொன்னியம்மன்” என்று பெயர் வைக்க முடிவு செய்தனர். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். அன்று முதல் இந்த பொன்னியம்மன், பாதாள பொன்னியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறாள். நூறு ஆண்டுகட்கு முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்ப ஆறு மாதமாகுமாம். சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதி உலா சென்றதாலேயே இத்தனை காலம் ஆகியதாம். கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.

                    அம்மனுக்கு அலங்காரமும், நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குல தெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த ஆலயத்தில் அண்ணன்மார்களுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. முதலில், அவர்களுக்கு பூஜை செய்த பிறகே பாதாள பொன்னி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

                    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரச மர மேடை, நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கரு வறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக் கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் புடைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது. அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள். சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்

                    அம்மன் சிலை கிடைத்த இடம் சுற்றிலும் இப்போதும் பள்ளமாகத்தான் உள்ளது. ஆனால் அந்த காலத்திலேயே பொன்னியம்மனை சிறப்பான உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் வெளியில் இருந்து பார்த்தாலும் அம்மன் சிலை அழகாக தெரியும். அம்பாளுக்கு தினமும் காலை ஒரு நேரம் மட்டுமே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கால பூஜையும் காலை 6.15 மணிக்கு தொடங்கி 6.45 மணி வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. நல்லெண்ணை, எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சந்தனம், மஞ்சள் என்று பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

                    பிறகு அலங்காரம் செய்து ஆராதனை நடத்தப்படும். முன்பெல்லாம் அம்மனுக்கு பாவாடை அலங்காரமே செய்யப்பட்டது. ஆனால் இப்போது புடவையில் மிக அழகாக அலங்காரம் செய்கிறார்கள். அதுபோல் தினமும் மாலை சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு நாட்களில் பாதாள பொன்னியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்கிறார்கள். 

                    ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் நடத் தப்படுகிறது. இந்த 10 நாட்களும் பாதாள பொன்னியம் மனுக்கு 10 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. 10-வது நாள் ஆடிப்பூரம் விழா நடத்தப்படுகிறது.

                    அன்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்யப்படும்.  மாலை அம்மன் தாய்வீடு சென்று வருவார். அப்போது அம்மன் வீதி உலாவும் நடைபெறும். பர்னபி ரோடு, ஆம்ஸ் ரோடு, பண்டார சந்து, வெள்ளாளர் தெரு, சரவண பெருமாள் தெரு வழியாக வந்து இறுதியில் அழகப்பா தெரு வழியாக அம்மன் ஆலயம் திரும்பி வருவாள்.

பிரார்த்தனை :

                    பாதாள பொன்னி அம்மனை சென்னையில் பல லட்சம் மக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாக திகழ்கிறது. எல்லாவித பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வும், பரிகாரமும் கிடைக்கும்.

                    பக்தர்கள் மனம் உருகி வழிபட்டால் மிக எளிதாக பாதாள பொன்னியம்மன் அருளை பெற முடியும். 51 தடவை அல்லது 101 தடவை பாதாள பொன்னியம்மனை சுற்றி வந்து வழிபட்டு, கோரிக்கைகளை கூறினாலே போதும், அதை அவள் நிறைவேற்றி வைத்து விடுகிறாள். இது ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் அனுபவித்து வரும் நிதர்சனமான உண்மையாகும்.


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.