ஈசனுக்கு மிகவும் உகந்த கார்த்திகை சோம வார விரதம் இன்று (16.11.2020) தொடக்கம் : சித்தர்க்கடியான்.

ஈசனுக்கு மிகவும் உகந்த கார்த்திகை சோம வார விரதம் இன்று (16.11.2020) தொடக்கம் : சித்தர்க்கடியான்.

                     கார்த்திகை சோமவாரம். சிவவழிபாட்டுக்கு  மிக உகந்த திருநாள். ஏன் தெரியுமா?

                    சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.


                     க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு 'சந்திரசேகரர்' என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

                    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

                    இந்த நாட்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.

                    கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

சோமவார விரதம் தோன்றிய வரலாறு:

                    சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தனது 27 மகள்களான கார்த்திகை, ரோகிணி, மிருகžருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால், சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர்.

                    ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான். அதனால், சந்திரன் தனது கலைகளை இழந்தான், அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை, 
"கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை" நினைத்து விரதம் அனுஷ்டித்தான். அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான், அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார். அதனால், சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான். ஆயினும், "பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து, பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து, கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம்" எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும், தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார்; கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே! பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.
                    இவ்வாறு; சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான்; சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சசிதரர் , சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர்என்றும் புகழப்பட்டார். 

                    இந்த கார்த்திகை விரதம், சோமன் என்னும் சந்திரனின் பெயரால் (உமையம்மையுடன் கூடிய சிவபெருமானின் ஒரு நாமமும் சோமன்) "சோமவார விரதம்" என்று வழங்கப்படலாயிற்று. "சந்திரன் வேண்டுதலுக்கு இணங்கி, கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன், இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும்." என்று சந்திரன் வேண்ட, அவ்வாறே அருள் பாலித்தருளினார் ஐயனும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் ஆகும். இங்கு தான் சோமனாகிய சந்திரன் எம்பெருமானுக்காக சோம வார விரதம் இருந்து அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.