புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : பகுதி 1 : சித்தர்க்கடியான்.

புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : சித்தர்க்கடியான். 

                                                            பகுதி - 1

                    சென்னையில் உள்ள மிக, மிக பழமையான அம்மன் கோவில்களில் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் மிகுந்த மகத்துவம் கொண்டது. புரசைவாக்கத்தில் இந்த சக்தி தலம் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் பொன்னியம்மன் அவதரித்து இருந்தாள்.


                    முனிவர்களும், ரிஷிகளும் அவளை வழிபட்டு வந்தனர். கால வெள்ளத்தில் அவள் இருந்த இடம் மறைந்து போனது. என்றாலும், பூமிக்கு அடியில் புதையுண்ட நிலையிலும் தன்னை வழிபட்டவர்களின் குடும்பத்துக்கு பொன்னியம்மன் அருள் புரிந்து வந்தாள். ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு பொன்னியம்மன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கான காலமும் வந்தது.

                    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புரசைவாக்கம் பகுதியின் பெருமளவு இடங்கள் சென்னப்ப நாயக்கர் வசம் இருந்தது. இந்த இடத்தில் ஏராளமான நீர் நிலைகளும், தென்னை தோப்புகளும், மாந்தோப்புகளும் நிறைந்து இருந்தன. அதாவது, மிகவும் செல்வ செழிப்பான பகுதியாக புரசைவாக்கம் இருந்தது. சென்னையில் மெல்ல மெல்ல தங்கள் ஆட்சி அதிகாரத்தை பரவ செய்து வந்த ஆங்கிலேயர்கள் சென்னப்ப நாயக்கரிடம் புரசைவாக்கம் பகுதியை குத்தகைக்கு வாங்கி பயன்படுத்தினார்கள். நிறைய காய்கறி தோட்டங்களையும், பழத் தோட்டங்களையும் ஏற்படுத்தினார்கள். இந்த தோட்டங்களுக்கு நிறைய தண்ணீர் தேவைப்பட்டது.

                    அப்போது புரசைவாக்கத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறைய தண்ணீர் வளம் இருப்பது தெரிய வந்தது. எனவே அங்கு கிணறு தோண்ட முடிவு செய்தனர். உடனே அங்கு கிணறு தோண்டப்பட்டது. அதாவது, இப்போது பாதாள பொன்னியம்மனின் கருவறை பகுதிதான் அது. வழக்கமாக அந்த பகுதியில் 6 அடி தோண்டினாலே தண்ணீர் கொப்பளித்தப்படி வந்துவிடும். ஆனால் 30 அடி தோண்டியும் தண்ணீர் வரவில்லை.

                    என்றாலும், பள்ளம் தோண்டியவர்கள் மனம் தளராமல் மேலும் பள்ளம் தோண்டினார்கள். திடீரென அவர்களது மண்வெட்டியில் பெரிய பாறை ஒன்று தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த கல்லை எடுத்து புரட்டினார்கள். மறுவினாடி அந்த பள்ளத்தில் இருந்து தண்ணீர் வெள்ளமாக பீறிட்டு வந்தது. அந்த கல்லை பள்ளத்தில் இருந்து மேலே கொண்டு வந்து பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. அது அம்மன் சிலை. அந்த அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. நைவேத்தியமும் செய்து வழிபடப்பட்டது.

                    அப்போது ஒரு பெண்மணி மீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன் என்றாள்.’’ அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர்.

நாளையும் தொடரும்.........

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.